Monday, November 8, 2010

மௌனம்


உனது மௌனம் எனதருகில் சுவாசித்து செல்கிறது
என் தலையை நான் நிமிர்கையில்
அது என் கழுத்தருகில் சுவாசிக்கிறது

எனது புழுக்கமான இரவுகளில்
நான் உறங்காத பொழுதுகளில்
என் மெத்தையில் அது உறங்கிச்செல்கிறது

தினமும் கடந்து செல்லும் ஆயிரம் தடயங்களில்
நிஜமான என்னை
அது அடையாளம் காண்கிறது

சத்தமான சாலையில்
குழம்பிய மனித மனங்களின் மத்தியில்
உனது மௌனம் மட்டுமே எனக்கு ஆறுதலானது

அது என்னை சுற்றியே திரிகிறது
இயக்க விதிகளையும்
ஈர்ப்பு விதிகளையும் ஏற்க மறுக்கிறது

உனது மௌனம் இருண்ட சாலைகளை
ஒளிமிகுந்த சாலையாக மாற்றி தருகிறது
அது எங்கும் நிறைந்திருக்கிறது

எனது நிழலினை போல என்னை விட்டு செல்லாது
உனது மௌனம் என்னை அணைத்து வழிநடத்துகிறது

தேவையில் என்னை கட்டித்தழுவுகிறது
உன்னை நான் சமீபகாலங்களில் தேடுவதே கிடையாது

உனது மௌனம் என்னை
பின் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது
எங்கும் எப்போதும்...

Wednesday, September 1, 2010

நீயில்லை!


















உறங்கமுடியவில்லை!


எனக்கு தெரிந்ததெல்லாம் உண்மையில்லை!

நீயில்லை!



சுவாசிக்க முடியவில்லை!

இதயம் இரண்டானபோது.

துடிக்கவில்லை!

நீயில்லை!



நீ போகவில்லை!

ஆனால் நீ இங்கில்லை!

இன்றைய இரவு எனக்கு முடியவில்லை

நீயில்லை!



இதயத்தின் தனிமை என்னை

உன்னிடம் இருந்த பிரிக்கவில்லை!

நீயின்றி என் வாழ்வு

முழுமையில்லை!

நீயில்லை!



விட்டுப்போக முடியவில்லை!

நான் நேசிக்கும் எல்லாம்

நான் வாழ்வதற்கு எல்லாம்

உன்னிடம் உள்ளப்போது!

கனவுகள் வருவதில்லை!

உறக்கமின்றி என் இரவுகள்!

உன்னோடு இருப்பதென்றால்

நீயில்லை!



நீ போன வழியுமில்லை!

பாதை மறந்து போகிறது!

கால்தடங்கள் மறைந்து போகிறது!

காற்றோடு கலந்தது போல்...



நீயின்றி நானில்லை!

இப்போது நீயில்லை!

எல்லாம் பொய்!

நீ இன்றி எல்லாம் பொய்!

நான் இருப்பதும்......

Monday, August 9, 2010

எனக்கு முத்தமிடுங்கள்

எதை நோக்கி பயணிக்கிறேன் என்பதை அறியாமல்

பயணிக்கிறது எனது கால்கள்

வாழ்கையை கடன் வாங்கி

துவங்குகிறது எனது நாட்கள்

கருப்பாய் வருகிறது கனவு

சிவப்பாய் இருக்கிறது நிஜம்

சிலுவை சுமக்க அச்சமில்லை

அதன் மீதுதான் படுத்துக்கிடக்கிறேன்

ஆணி அடிக்க காத்துக்கிடக்கிறேன்

முத்தமிட எனக்கு யுதாஸ் இல்லை

காத்துகிடக்கிறேன் எனக்கு யாராவது முத்தமிடுங்கள்

என்னை சிலுவையில் ஏற்றுங்கள்

மீண்டும் உயிர்த்தெழ எனக்கு உதவி செய்யுங்கள்.....

Wednesday, July 7, 2010

நான் தனிமையில் அல்ல




இரவு, அது தனிமையில்
தெருக்களும் சந்திப்புகளும் கூட
நான், பயணித்துக்கொண்டு
நான் தனிமையில் அல்ல

வானம், அது தனிமையில்
நிலவை அந்த கடல் விழுங்கிய போது
நான், உன் நிழலினை பிடித்துக்கொண்டு
நான் தனிமையில் அல்ல

பிரபஞ்சம், அது தனிமையில்
உயிரற்ற தசைகளோடு அன்பு மரணிக்கையில்
தனிமையின் துணையோடு நடக்கையில்
நான் மட்டும் தனிமையில் அல்ல...

Thursday, June 3, 2010

உன் கருவறைக்குள்




நீ என்ற ஒரு சொல் நானாக இங்கு நிலைக்கிறது.
உன்னோடு இருந்த ஒவ்வொரு தருணமும்
உன் கருவரைக்குள் வளர்ந்ததாகவே உணர்ந்தேன்,
உன் கண்ணீர் கன்னங்களில் வழிந்ததை
நான் பார்த்த போதெல்லாம்
என் ஜீவன் வழிந்ததாகவே எனக்கு நீ நியாபகப்படுதினாய்
உன் பாதத்திற்கும் செருப்புக்கும் இடையில்
சிக்கிய கல்லாய் நான்
உறுத்தலோடு நீ. பாதையை கடக்கிறாய்,
காலுக்கடியில் அல்ல நான்
உன் கருவறைக்குள்
கருவாய் உன் ஜீவனாய்
இப்போது காதலியே அன்னையாய்,
நான் பேருபெற்றவன் ஏனெனில்
இந்த காதலும் தாய்மையும் ஆளும்
விண்ணரசு என்னுடையது...

Wednesday, May 26, 2010

விழிக்காத நாட்கள்



உறக்கம் என்னை மகிழ்ச்சியில் வைத்திருக்கிறது!
விழித்திருக்கும் நேரங்களில் மரணம் சிறப்பாகவும்
பத்திரமாகவும், மிக அமைதியாகவும் இருக்கிறது!
என் கண்கள் மூடியிருக்கும் வேலையில்
கனவுகள் என்னை தூக்கி சுமக்கிறது!
அமைதியை அறிமுகம் செய்கிறது!
மகிழ்ச்சியையும் அன்பையும் தழுவ செய்கிறது!
சில நேரங்களே இருந்தாலும், என் கனவுகள்
எனக்கு பலம் சேர்க்கிறது அன்றைகளுக்கு
என் கனவுகள் பயம் நிறைந்தது, மாயமானது!
ஆனால் அது எனக்கு நிஜ வாழ்வைவிட சிறப்பானது!
கனவில் நண்பர்கள் விட்டு செல்வதில்லை
நேரம் வேகமாகவோ, நிதானமாகவோ போகவில்லை!
என்னை யாரும் வெறுப்பதில்லை, மறப்பதுமில்லை!
எதுவுமே உண்மையில்லை !
இருந்தாலும் மகிழ்ச்சியாயிருக்கிறது
சூரியன் வருகிறான்... நான் விழிக்கிறேன்...
எது உண்மையோ அது நடக்கிறது
வலியிருக்கிறது, சோகமிருக்கிறது !
பயமும், வெறுப்பும் முகம் கழுவுகிறது
ஆதலால் கண்களை திறக்காமலிருக்க
உறக்கம் நீடிக்க வேண்டுகிறேன்!
என் கனவுகள் கலையாமலிருக்க
அன்பு விழித்தேயிருக்கும்...

Friday, May 21, 2010

வேலியில் செருகிய இதயம்




வானத்தில் மேகங்கள் திறண்டால் பூமிக்கு மழை வரும் என்பது தெரியும்.
அப்படித்தான் காற்றும் வேகமாக வீசும் நேரம் சரியாக யாரும் கணிப்பது
கிடையாது. அப்படி வீசிய காற்றில் விழுந்த மரம் வடக்கில் விழுந்தாலும்
தெற்கில் விழுந்தாலும் விழுந்த இடத்தில் தான் அது இருக்கும்.


என் பயண நாட்களில் நான் கண்ட மனிதர்கள் மிக மேலானவர்கள்
என்றுத்தான் நான் நினைத்திருந்தேன், என்னை நான் கண்டுகொள்ளும்வரை.
நான் சிரித்ததை விட துயரத்தில் இருந்ததை மேலென கருதுகிறேன், ஏனென்றால்
துயரத்தால் முகத்தில் வருத்தம் தோன்றலாம் ஆனால் அது என் உள்ளத்தைப்
பண்படுத்தியது.

என் மக்கள் அங்கு ஒடுக்க படுவதையும் கண்ணீர் சிந்துவதையும் நாம் பார்த்து
என்ன செய்துவிட்டோம், யாராவது அவர்களுக்கு ஆறுதலாய் இருந்தோமா ?
அவர்களை தேற்றினோமா ? அவர்களை ஒடுக்கோவோர் கைகள் ஓங்கித்தான்
இருக்கிறது இன்னமும். இன்று உயிரோடு இருப்பவர்களின் நிலைமையை விட
ஏற்கனவே மாண்டு மறைந்துபோனவர்களின் நிலைமையே மேலானது.

ஏன் நான் இன்னமும் விடைக்காக அலைந்து கொண்டு இருக்கிறேன். எனக்கு
தெரிந்து தான் இருந்தது அந்த விடை, நான் பிறந்தேன் நிச்சயம் இறப்பேன்
நட்டவன் அறுப்பான், இடிக்கப்பட்டது எழுப்பப்படும், அழுத குழந்தை சிரிக்கும்,
போருக்கு ஒரு காலம் என்றால் அமைதிக்கு ஒன்று உண்டு தானே.
விழுந்தவன் எழுவான் என்பது உண்மைதானே.

மக்களே ! நீங்கள் அழுவது எனக்கு கேட்கிறது அந்த முள்வேலிக்கு பின்னிருந்து
நீங்கள் பாடுவதும் எனக்கு கேட்கிறது. உங்கள் உடைமைகளை நீங்கள் அந்த வேலியில்
மாட்டிவைத்திருப்பதும் எனக்கு புரிகிறது. அவர்கள் உங்களை பாட சொல்லலாம்.
பாடுங்கள் ! வெற்றியின் பாடலை பாடுங்கள். உங்கள் பிள்ளைகளை அவர்கள்
மிருகங்களை போல் நடத்தலாம். அவர்களை பாறைகளில் மோதி கொல்லளாம்.
மிக அருகிலிருந்து தாக்கலாம், மகிழ்ச்சியாய் இருங்கள். இது அவர்களுக்கான நேரம் !
இது வெகுநாட்களுக்கல்ல ! எதிர்க்க முடியாத வீரன் வருகிறான் நம்மை காப்பான் அவன்.


இரத்தகறை படிந்த நம் ஊருக்கு நிச்சயம் கேடுவரும். அங்கு பொய்யும் கொலையும்
நிறையும். உன்னை கொன்றவன் அவர்களையும் கொல்வான். அங்கு சூறையாடலுக்கு
அளவே இருக்காது, உருளும் இரும்பு சக்கர வண்டிகளின் ஓசை ஓயாது, சக்கரங்களின்
கிறிச்சிடும் ஒலி அடங்காது, மறைந்து தாக்குவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும், அவர்களின்
துப்பாக்கி துரு ஏறாது. நீங்கள் காயமடைந்து கூட்டமாய் இருக்கிறீர்கள், தொலைவில்
பிணங்கள் குவிந்து கிடக்கிறது, மாண்டவர்களுக்கு கணக்கே இல்லை அந்த பிணங்களின்
மேல் இடறிவிழுகின்றனர் .



அழகாய் மயக்கும் கவர்ச்சியால் பல நாட்டவரையும் ஏமாற்றிய அந்த
விலைமகனின் எண்ணற்ற வேசித்தனங்களே இதற்கு காரணம்

என் மக்களே ! உன்னை தேற்றுவோரை நான் எங்கே தேடுவேன் யாரேனும் உண்டோ ?
என்று சொல்லுங்கள். அவர்களை நான் எங்கே தேடுவேன் ? வன்னியிலா ? முல்லையிலா ?
அல்லது யாழிலா ? கடலை அரணாகவும், தண்ணீரை மதிலாகவும் கொண்ட என் தேசமே !
உன் மக்களை காக்க நீ எழும்ப மாட்டாயா ? முற்றுகை நாளுக்காகத் தண்ணீரை சேமித்து ! வை
உன்னுடைய அரண்களை வலிமைப்படுத்து !



சிட்டுகுருவிகள் போல் மடிந்தது தெரியாது மடிந்தனர் என் மக்கள், புகையென மறைகின்றனர்
அவர் இதயம் புல்லென தீய்ந்து கருகுகின்றது, எதிரிகள் நாள் முழுதும் இழித்துரைக்கின்றனர்
சாம்பலைத்தான் உணவாக தருகின்றனர். இந்த முள்வேலியில் மாட்டப்பட்டிருக்கும்
என் உடைமைகளில் என் இதயமும் இருக்கிறது பாருங்கள். அது கேட்கும் கேள்விகளுக்கு
உங்களில் யாருக்காவது விடைதெரியுமா ? நான் மரணித்து நாட்களாயின ! அந்த பிணங்களின்
குவியலில் நான் அம்மணமாய் படுத்திருக்கிறேன் நீங்கள் என்னை கவனித்தீர்களா ?
மரணம் என்னை நோக்கி வருவதை நான் மரிப்பதற்கு முன் கண்டேன். அது மிக கொடூரமாக
என்னை தாக்கியது, என் சகோதரர்களின் மரணத்தை நான் சில வினாடிகளே தள்ளி போட முடிந்தது.


மரணம் என் உடலைவிட்டு என்னை துரத்தியது ஆனால் என் தேசத்தைவிட்டு அல்ல.

Wednesday, May 5, 2010

நான் காற்றாய் வருவேன்



அந்தரத்தில் சிக்கி தவிக்கிறேன்
கழுமரத்தில் ஏற்றிவிட்டாய் என்னை!
நேசிக்க ஒருவருமில்லை எனக்கு
அண்ணாந்து பார்த்து கூப்பிடவும் இல்லை
என் சிலுவை மிக பாரமானது
சிலுவையின் அடியில் நீ
சிரித்துக்கொண்டு!
தேவதைகள் உன்னை தூக்கிச் சுமக்கலாம்.
என் தேடல் என்னை தூக்கிச் சுமக்கிறது
விரல்களின் விளிம்பில் உன் நினைவுகள்!
இதயத்திடம் கற்றுக்கொண்டேன்
துடிப்பது எப்படி என்று!
விழிகளில் நீர்வழிய நிற்கிறேன்
அதை ருசிப்பதற்கு
காத்துக்கிடக்கிறது என் நிலம்.!
நான் நானாக தான் இருக்கிறேன்!
நீ தான் நானில்லை என்கிறாய்!
நான் ஜன்னல் வழியே
பிரபஞ்ச தேவனை பார்க்க செல்கிறேன்
நீ காற்றுள்ள போதே தூற்றிக்கொள்!
நான் காற்றாய் வருகிறேன்...

Monday, May 3, 2010

ஒளியும் நானும் ...






நான் சாலையில் நடந்து வருகையில்
அந்த நிலவே என்னை தினமும் இரவில் பின் தொடர்கிறாள்
என் சாலைக்கும்
என் கால்களுக்குமான
தொடர்பு நெருங்கி கொண்டே போகிறது!
ஒளி என்னை கடக்கையிலும்
நான் ஒளியை கடக்கையிலும்
இருளை நினைவுப்படுத்துகிறது அந்த தருணங்கள்
பயமாய் இருக்கிறது எனக்கு
சாலைகளில் ஊர்ந்து வரும் வேகமான வாகனங்களில்
என்னை இணைத்துக்கொள்ள பல நேரங்களில் எண்ணம்
என் கோழைத்தனம் அதை தினமும் தள்ளிப்போட்டு கொண்டே இருக்கும்
என்னுடைய நினைவுகளை கைப்பிடித்துக்கொண்டே
நான் தினமும் எண்ணிக்கையற்ற தூரத்தை கடந்தே செல்கிறேன்.
நான் மையமான அன்பை தேடியே என் நாட்களை நகர்த்துகிறேன்
தெருவிளக்கில் படித்த நண்பனை பார்த்தப்போதெல்லாம்
ஒளியின் அவசியம் என்னுள் புகுத்தப்பட்டிருக்கிறது!
நான் எதை நோக்கி பயணிக்க வேண்டும் என்பதை
ஒளியே தீர்மானிக்கிறது!
என் இரவுகளில் நேர்கோட்டில் பயணம் செல்லும் ஒளி
சற்று அலைவடிவில் பயணித்தால்
நாம் என்னவாக மாறியிருப்போம்
என்பதை என்னால் யூகிக்கமுடிகிறது
எனக்கு ஒளி தேவை
என்பதை மெல்ல உணர்கிறேன்
இருளின் வக்கிரம் ஒளியால் முடக்கப்படுகிறது
என்பதை என் பயணம் கற்றுத்தருகிறது....

Sunday, April 11, 2010

நீயின்றி நானில்லை




நீ என்ற ஒரு வார்த்தையோடு நிற்கிறது என் கவிதை
தூரத்தில் உன்னை பார்த்த போதே என் அடி வயிற்றில்
கோடி பட்டாம்பூச்சிகள் சிறகடிக்க துவங்கிவிட்டன
அதை மறைப்பதற்கே நான் வெகுதூரம் சென்று திரும்ப வந்தேன்

என்னோடு நீ நடக்கையில் நான் மிதந்தே வந்தேன்
ஆயிரமாண்டு பழமையான மிருகங்கள்
நம்மை தாண்டி சென்றதை நான் மட்டுமே பார்த்தேன்
நீ உனக்கு கீழ் நதியிருப்பது போல் நடந்துவந்தாய்

நீ என்னிடம் பேசிய முதல் வார்த்தை மௌனம்
இரண்டாவது எனக்கு புரியவில்லை
எனக்கு கண்களின் வார்த்தைகள் தெரியாது
மூன்றாவது எனக்கு கேட்கவில்லை
அப்போது நான் நானாகவேயில்லை

உன் வார்த்தைகள் ஒவ்வொன்றும்
என்னை தீர்மானித்துகொண்டிருந்தன
நீ அருகிலிருந்த நேரங்களில் நான்
மொழியற்றவனாய் தான் இருந்திருக்கிறேன்
நீ என்னை முற்றிலுமாக ஊமையாக்கியிருக்கிறாய்

வெகு நேரம் அமர்ந்திருந்தோம் பேசிக்கொண்டு
எண்ணிப்பார்த்ததில் அர்த்தமுள்ளவை சிலதே
நான் ஒருமுறை கூட உன் கண்களை பார்க்கவில்லை
நான் இப்போது உயிரோடிருப்பதற்கு அதுவும் ஒருகாரணம்
நீ என்னை மட்டும் அல்ல என் எண்ணங்களையும் சிறைபிடித்தாய்

பயணத்தின் போது உன் நினைவுகள் என்னை காற்றோடு தூக்கிவந்தது
உன் அருகில் அமர்ந்து வந்தாலும் நான் தனியாகவே பயணித்தேன்
காகிதங்கள் நிறைய கிறுக்குவதற்கு வார்த்தையிருக்கிறது
நீ போகிறபோக்கில் தொட்டுசென்றதை எழுதுவதற்கு ஆனால்
என் சுவாசம் தூக்கிசென்றாய் இவ்வுலகில் எனக்கு அனுமதிமறுத்தாய்...

எதுவாக இருக்கலாம்





காதல் வாழ்வு
குழந்தை முதுமை மரணம்
நம்பிக்கை தேடல்
எதற்கு

ஏன் நான் வாழ்கிறேன்
எனக்கு நம்பிக்கை தருவது எது
நான் மறிபதற்க்கு

மிருகத்தை என்னிடமிருந்து
விரட்டிவிடுங்கள்
என் இந்த நிமிடங்களை
அவன் தின்னுகிறான்


இதுவாக இருக்குமோ
இது மகிழ்ச்சியாக இருக்குமோ
இது அதுவாக இருக்குமோ
நான் மறக்காத ஒன்று
அது உண்மையோ
வாழ்வு புதிதான ஒன்றோ
அதில் நான் பயணிக்க முடியுமோ

ஒரு காரணம் தேடுகிறேன்
வாழ்வுக்கும் மரணத்திற்கும்
மூழ்குவதன் காரணம்
மூச்சுபிடிக்கும் போது தேடுகிறேன்
சிரிப்பதற்கும் அழுவதற்கும் கூட

நீங்கள் நம்பிக்கையின்றி எதற்கோ
நம்பிக்கையோடு
ஆம் நம்பிக்கையோடு

அது உண்மையாக இருக்கலாம்
அது வாழ்கையாக இருக்கலாம்
அது அனைத்தும் நானாக எனக்குள்ளும்
இருக்கலாம்
அது இதுவாகவும் இருக்கலாம்
இது மகிழ்ச்சியாகவுமிருக்கலாம்
அது நீயாகவுமிருக்கலாம்
அது நானாகவுமிருக்கலாம்...

Friday, March 19, 2010

எனக்கான நீ




எல்லாம் நிறைவேறிற்று
ஆனால் இன்னமும் வலி இதயத்தில்
உள்ளே வாழ்ந்து கொண்டேயிருக்கிறது

என்னை விடுத்து
எங்கே உலா சென்றாய்

எனக்கு நீ இன்றே வேண்டும்
என் தலையணை கண்ணீரால்
ஈரமாய்
நீ எங்கே சென்றாலும்
அது நதியாய்
உன் பெருங்கடலை வந்தடையும்

என் தொலைந்த வார்த்தைகள்
உன் இதயத்தினுள் இருக்கிறதா
தேடிப்பார்
நான் தனிமையில் உன் இசையில்
தொலைந்தவனாய்
நீ மீண்டும் வா
உனக்கு தெரியாதா என்னை அணைத்து
காப்பதற்கும்
எனக்கு முத்தமிடுவதற்கும்
தூங்க வைப்பதற்கும்
இந்த ஊழியில் நீ மட்டுமே என்று

நான் உன்னோடிருக்கிறேன்
உன் ஒவ்வொரு செயலிலும் நான்
நீயின்றி வெறுமையை பார்க்கிறேன்
அந்த வானத்தில்
எனக்கான மின்னும் நட்சத்திரம் நீ
உன்னை பார்த்து உறங்க நான்
எங்கே நீ...

Thursday, February 18, 2010

நீ உறங்குகையில்



நீ உறங்குகையில் தான்
எனக்கு எத்தனை கனவு
உன் சன்னல் கம்பியில் சிட்டுகுருவிகள்
சத்தமின்றி காதல் செய்கின்றன
நானிட்ட மோதிரம்
உன் விரல்களை நெரித்தாலும்
அதை கழட்டுவதில்லை நீ
ஆயிரம் ஆயிரமாண்டு பின்னோக்கி
நகர்ந்தாலும் உன் காதலுக்கு இணை
உன் காதல் மட்டுமே
என் இத்தனை நாட்களின் எண்ணிக்கையை
நீ தூங்கிய ஒருகணத்தில்
மரணிக்க செய்தாய்
வெந்நிற பறவையாய் எனக்குமுன்
என்னை நினைத்து எனக்காக
கணவுகளில் மிதக்கும் அன்னம் நீ
வேட்டையாட முடியாத வேடன் நான் ...



Tuesday, January 26, 2010

அவளொரு பட்டாம்பூச்சி...




ஒரு பட்டாம்பூச்சி என் கண்முன்னே
சரியான பாதையவளுக்கு தெரிந்திருந்தது
அவள் இங்கும் அங்கும் சிறகடிகிறாள்
என் விரல்களில் தானாய் வந்தமர்கிறாள்

அவள் சிறகுகளில் படிந்த வண்ணமாய்
சூரியனின் ஒளி ஓவியமாய்
நிச்சயமாய் சொல்லுகிறேன்
அவள் பாடுவதை நான் கேட்கிறேன்

அவள் வண்ணம் ஊதாவும் வெளிர்சிவப்பும்
அவளை பார்த்த கணத்தில்
என்னுள்ளிருந்த வெறுமை மூழ்குவதை
நான் உணர்கிறேன்

என் இதயத்தின் ஈரம் உருக துவங்கியது
வெப்பம் அதற்கு மாற்றாக
இதற்கு முன் இது எனக்கு நேர்ந்ததில்லை

அவள் கடைசி பாடலை என் காதில் பாடி
உயர சிறகடித்தாள் என் மனதில்
அவளை இழந்தாள் நான் இறப்பேன்


திடீரென அவள் குரல் தெளிவாய்
என்னை உன்னால் இழக்க முடியாது
உன் அருகில் நான் எப்போதும் என்றாள்

நான் என் வீட்டை தோட்டமாய் மாற்றினேன்
மலர்களை நிரப்பினேன்
அவள் எப்போதும் பறந்தே என்னை சுற்ற

தினமும் அவளை பார்த்தே கிடக்கிறேன்
இப்போது எனக்கும் தெரிகிறது
சரியான பாதை...

Thursday, January 21, 2010

காலம்...





வாடிய ரோஜாக்களை அந்த பூங்கொத்தில் பார்த்த போது
நேரம் பாய்ச்சலாய் ஓடிகொண்டிருப்பதை நினைவுபடுத்தியது,
ரோஜாக்கள் வெகுநேரம் மலர்ந்திருக்காது என்பதை
உணர்ந்து கொண்டேன் அது என் வாழ்க்கையை நினைவுபடுத்தியது.

வாழ்க்கையை எப்படி பார்க்கிறேன் என்பதை நினைத்து பார்க்கிறேன்
காலத்தை குறித்தும் அதன் வேகம் குறித்தும் யோசித்து கொண்டேயிருக்கிறேன்
நான் இன்னமும் அதன் சுழற்சியில் வெகு தூரம் தாமதித்தே நடந்து வருகிறேன்.

கதிரவனின் உதவியால் மொட்டுகள் மலர்ந்து
ரோஜாவின் நறுமணம் மிக வீர்யமானதாக வீசிகொண்டு..
அந்த இதழ்கள் புதிதாய் மலர்ந்த போது யாரவது பார்த்தீர்களா ?
என்ன நேர்ந்திருக்கும் யாரும் அதை இதுவரை முகராமலிருந்திருந்தால்.

என் வாழ்க்கை எனக்கு புரிந்திருக்கும் நேரத்தில் நிறைய ரோஜாக்கள் மடிந்திருக்கும்
மற்றவை மலரவிருக்கும் மீண்டும் நான் சென்றிருப்பேன்
அது வரை நான் எத்தனை இழந்திருப்பேன்.

ஆம் உண்மைதான் மலர்ந்த தூய ரோஜாக்கள் குறுகிய காலமே இங்கு வசிக்கிறது
ஆம் உண்மைதான் என் வாழ்க்கையும் அப்படித்தான்
நான் போராடித்தான் பார்க்கிறேன் என் வாழ்வின் சாரமறிய
ஆனால் இடையூறுகள் அவை நேராமல் தடுக்கின்றன.

நேரம் நான் செலவு செய்ததைவிட தொலைத்ததே அதிகம்
அதை எனக்கும் என் நண்பருக்கும்
என் குடும்பத்திற்கும் பகிர்ந்திருக்கலாம்
ஆனால் தொலைத்துவிட்டேன்
அன்பான பரிசை இழந்துவிட்டேன் அதை விற்கும் பொருளாய் பார்த்துவிட்டேன்.

இன்று அந்த ரோஜாக்களை பார்த்தது முதல்
காலம் அதன் வேகத்தை கூட்டி முன்னேறி செல்வதை உணர்கிறேன்
இயந்திர நகர்தலே நொடிகளாகவும் மணிகளாகவும்
தவிர்க்கமுடியாத அதன் சுழற்சி ஒரு சாண் முட்களே தீர்மானிக்கிறதோ.

நிறுத்தமுடியாத அந்த நகர்தலும் யாருக்காகவும் நிறுத்தாத அதன் மூர்க்கமும்
வேகமாக தன் செயல் நிகரற்றது என்ற திமிருடன்
முன்னோக்கி ஏலனமாய் சிரித்தே நகர்ந்தது
காலம் என் வாழ்க்கையை இறுக பிடித்துகொண்டது.
ஆனால் அந்த கடிகாரத்தை நிறுத்திவிட்டேன்
எனக்கு என்ன மீதமுள்ளது என்பதை நினைத்துப்பார்க்க...

காலம் நமக்கு பரிசு அது விற்பனைக்கு அல்ல
அது நம்மால் கட்டுபடுத்தகூடிய ஒன்று
நான் முன்னேற அதை துரத்தி பிடிக்க போகிறேன்
அதற்கான மரியாதையை வழங்க போகிறேன்
அதனோடு கைகோர்த்து நடக்க போகிறேன் அதன் பிள்ளையாய்.


பாட்டியின் இறுதி மரியாதையில் அவள் அருகில் அமர்ந்த நேரத்தில் ரோஜா என்னை மாற்றியது


என்னை போல் காலத்தை உதாசீனம் செய்தவர்களுக்கு,
காலம் உங்களுக்கும் ஒரு ரோஜாவை பரிசளிக்கும்...

Monday, January 18, 2010

மாய ஊழியில் நான்



முடிவில்லா என் கனவுக்குள்
நான் விழித்தே கிடக்கிறேன்
என் நினைவுகள் விரிவடைய
காலம் என்னை பார்த்து
ஏலனம் செய்து கொண்டேயிருக்கிறது
வெறுமையான இருளில்
என் சொந்த நினைவுகளையும்
தேடி தவிக்கிறேன்
மாயை என்னும் ஊழியில்
எது போலியோ அது கத்தி
கூச்சலிடுகிறது
எனக்காக யாரும் கேட்காத
இடத்தில் அழுதுகொண்டு நான்...

Tuesday, January 12, 2010

கனவுக்குள் தொலைந்த தேவதை



என் இரவுகளில் உன் நினைவுகள்
உன்னோடு என் அந்நாட்களை
குறுந்தகடாய் சுழன்று
என்னை பின்னோக்கி சுழட்டியது
உன் கண்கள்
உன் சிரிப்பு
உன் பேச்சு
அனைத்தும் என் கண்களை
ஈரமாக்கி நகர்ந்தது

ஒரு முணுமுணுப்பு
என் காதுகளில் யாரோ என் பெயரை
ரகசியமாய் அழைப்பது எனக்கு கேட்டது
உற்று கேட்கிறேன்
அது உன்னுடைய குரல்
என் அறை முழுக்க அது ஒலிக்க துவங்கியது
அந்த குரலை நோக்கி நான் வெளியே செல்கிறேன்

முழுதாய் வெண்ணிலா
இந்த என் இரவை நிரப்பி
சில்லென தென்றல்
மகிழ்ச்சியில் பாடுவதை போல என்னை வருடி
இந்த அண்டத்தை நிரப்பி
அந்த பாடலுக்கு மலர்களும் கொடிகளும்
அரங்கேற்ற நடனமாடிக்கொண்டு

தவறுதலாய் என் இதயம் துடிப்பதை நிறுத்தியது
நீ என் தோட்டத்திலிருந்ததை கண்டு
என் கனவுகள் நிஜமானது
வெண்ணிலவின் ஒளியில்
கதிரவனாய் உன் முகம் கடன் வாங்கி மின்னியது
நட்சத்திரங்களாய் உன் கண்கள்
என் இந்த காலங்களுக்கான ஆதாரமாய்
உன் உதடுகளில் வழிந்த உன் புன்னகை

என் நுரையீரலின் ஒட்டுமொத்த சுவாசத்தையும் ருசித்த
இந்த பிரபஞ்சத்தின் மிக சிறந்த வாசம் உன் மீது
நான் தேம்பி தேம்பி அழுகிறேன்
உன்னை மீண்டும் அந்த தோட்டத்தில் பார்த்தது முதல்
அப்படியே இந்த சுழற்சி நிற்க ஆசை
இந்த கணம் நகராமலிருக்க

என் பெயரை உச்சரித்து
உன் கரங்களை அகல விரித்தாய்
என் செயல்பாடுகள் நின்றன
உன் கரங்களை பற்ற பயம்
என் கரங்களுக்கு
உன்னை மீண்டும் இழப்பதற்க்கு
அவை தயாராயில்லை
இருந்தும் உன்னை நோக்கி நான்
மெல்ல பயணிக்க
இமைகளுக்குள் என் கண்கள்
போராடிதவிப்பதை பொறுக்காத என் நண்பன்
தட்டியெழுப்பிய போது
வெளிச்சத்தின் மத்தியில் அறையின் நடுவில்
கலைந்த கனவுகளின் கண்களோடு நான்...