Sunday, April 11, 2010
நீயின்றி நானில்லை
நீ என்ற ஒரு வார்த்தையோடு நிற்கிறது என் கவிதை
தூரத்தில் உன்னை பார்த்த போதே என் அடி வயிற்றில்
கோடி பட்டாம்பூச்சிகள் சிறகடிக்க துவங்கிவிட்டன
அதை மறைப்பதற்கே நான் வெகுதூரம் சென்று திரும்ப வந்தேன்
என்னோடு நீ நடக்கையில் நான் மிதந்தே வந்தேன்
ஆயிரமாண்டு பழமையான மிருகங்கள்
நம்மை தாண்டி சென்றதை நான் மட்டுமே பார்த்தேன்
நீ உனக்கு கீழ் நதியிருப்பது போல் நடந்துவந்தாய்
நீ என்னிடம் பேசிய முதல் வார்த்தை மௌனம்
இரண்டாவது எனக்கு புரியவில்லை
எனக்கு கண்களின் வார்த்தைகள் தெரியாது
மூன்றாவது எனக்கு கேட்கவில்லை
அப்போது நான் நானாகவேயில்லை
உன் வார்த்தைகள் ஒவ்வொன்றும்
என்னை தீர்மானித்துகொண்டிருந்தன
நீ அருகிலிருந்த நேரங்களில் நான்
மொழியற்றவனாய் தான் இருந்திருக்கிறேன்
நீ என்னை முற்றிலுமாக ஊமையாக்கியிருக்கிறாய்
வெகு நேரம் அமர்ந்திருந்தோம் பேசிக்கொண்டு
எண்ணிப்பார்த்ததில் அர்த்தமுள்ளவை சிலதே
நான் ஒருமுறை கூட உன் கண்களை பார்க்கவில்லை
நான் இப்போது உயிரோடிருப்பதற்கு அதுவும் ஒருகாரணம்
நீ என்னை மட்டும் அல்ல என் எண்ணங்களையும் சிறைபிடித்தாய்
பயணத்தின் போது உன் நினைவுகள் என்னை காற்றோடு தூக்கிவந்தது
உன் அருகில் அமர்ந்து வந்தாலும் நான் தனியாகவே பயணித்தேன்
காகிதங்கள் நிறைய கிறுக்குவதற்கு வார்த்தையிருக்கிறது
நீ போகிறபோக்கில் தொட்டுசென்றதை எழுதுவதற்கு ஆனால்
என் சுவாசம் தூக்கிசென்றாய் இவ்வுலகில் எனக்கு அனுமதிமறுத்தாய்...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment