Wednesday, May 26, 2010

விழிக்காத நாட்கள்



உறக்கம் என்னை மகிழ்ச்சியில் வைத்திருக்கிறது!
விழித்திருக்கும் நேரங்களில் மரணம் சிறப்பாகவும்
பத்திரமாகவும், மிக அமைதியாகவும் இருக்கிறது!
என் கண்கள் மூடியிருக்கும் வேலையில்
கனவுகள் என்னை தூக்கி சுமக்கிறது!
அமைதியை அறிமுகம் செய்கிறது!
மகிழ்ச்சியையும் அன்பையும் தழுவ செய்கிறது!
சில நேரங்களே இருந்தாலும், என் கனவுகள்
எனக்கு பலம் சேர்க்கிறது அன்றைகளுக்கு
என் கனவுகள் பயம் நிறைந்தது, மாயமானது!
ஆனால் அது எனக்கு நிஜ வாழ்வைவிட சிறப்பானது!
கனவில் நண்பர்கள் விட்டு செல்வதில்லை
நேரம் வேகமாகவோ, நிதானமாகவோ போகவில்லை!
என்னை யாரும் வெறுப்பதில்லை, மறப்பதுமில்லை!
எதுவுமே உண்மையில்லை !
இருந்தாலும் மகிழ்ச்சியாயிருக்கிறது
சூரியன் வருகிறான்... நான் விழிக்கிறேன்...
எது உண்மையோ அது நடக்கிறது
வலியிருக்கிறது, சோகமிருக்கிறது !
பயமும், வெறுப்பும் முகம் கழுவுகிறது
ஆதலால் கண்களை திறக்காமலிருக்க
உறக்கம் நீடிக்க வேண்டுகிறேன்!
என் கனவுகள் கலையாமலிருக்க
அன்பு விழித்தேயிருக்கும்...

Friday, May 21, 2010

வேலியில் செருகிய இதயம்




வானத்தில் மேகங்கள் திறண்டால் பூமிக்கு மழை வரும் என்பது தெரியும்.
அப்படித்தான் காற்றும் வேகமாக வீசும் நேரம் சரியாக யாரும் கணிப்பது
கிடையாது. அப்படி வீசிய காற்றில் விழுந்த மரம் வடக்கில் விழுந்தாலும்
தெற்கில் விழுந்தாலும் விழுந்த இடத்தில் தான் அது இருக்கும்.


என் பயண நாட்களில் நான் கண்ட மனிதர்கள் மிக மேலானவர்கள்
என்றுத்தான் நான் நினைத்திருந்தேன், என்னை நான் கண்டுகொள்ளும்வரை.
நான் சிரித்ததை விட துயரத்தில் இருந்ததை மேலென கருதுகிறேன், ஏனென்றால்
துயரத்தால் முகத்தில் வருத்தம் தோன்றலாம் ஆனால் அது என் உள்ளத்தைப்
பண்படுத்தியது.

என் மக்கள் அங்கு ஒடுக்க படுவதையும் கண்ணீர் சிந்துவதையும் நாம் பார்த்து
என்ன செய்துவிட்டோம், யாராவது அவர்களுக்கு ஆறுதலாய் இருந்தோமா ?
அவர்களை தேற்றினோமா ? அவர்களை ஒடுக்கோவோர் கைகள் ஓங்கித்தான்
இருக்கிறது இன்னமும். இன்று உயிரோடு இருப்பவர்களின் நிலைமையை விட
ஏற்கனவே மாண்டு மறைந்துபோனவர்களின் நிலைமையே மேலானது.

ஏன் நான் இன்னமும் விடைக்காக அலைந்து கொண்டு இருக்கிறேன். எனக்கு
தெரிந்து தான் இருந்தது அந்த விடை, நான் பிறந்தேன் நிச்சயம் இறப்பேன்
நட்டவன் அறுப்பான், இடிக்கப்பட்டது எழுப்பப்படும், அழுத குழந்தை சிரிக்கும்,
போருக்கு ஒரு காலம் என்றால் அமைதிக்கு ஒன்று உண்டு தானே.
விழுந்தவன் எழுவான் என்பது உண்மைதானே.

மக்களே ! நீங்கள் அழுவது எனக்கு கேட்கிறது அந்த முள்வேலிக்கு பின்னிருந்து
நீங்கள் பாடுவதும் எனக்கு கேட்கிறது. உங்கள் உடைமைகளை நீங்கள் அந்த வேலியில்
மாட்டிவைத்திருப்பதும் எனக்கு புரிகிறது. அவர்கள் உங்களை பாட சொல்லலாம்.
பாடுங்கள் ! வெற்றியின் பாடலை பாடுங்கள். உங்கள் பிள்ளைகளை அவர்கள்
மிருகங்களை போல் நடத்தலாம். அவர்களை பாறைகளில் மோதி கொல்லளாம்.
மிக அருகிலிருந்து தாக்கலாம், மகிழ்ச்சியாய் இருங்கள். இது அவர்களுக்கான நேரம் !
இது வெகுநாட்களுக்கல்ல ! எதிர்க்க முடியாத வீரன் வருகிறான் நம்மை காப்பான் அவன்.


இரத்தகறை படிந்த நம் ஊருக்கு நிச்சயம் கேடுவரும். அங்கு பொய்யும் கொலையும்
நிறையும். உன்னை கொன்றவன் அவர்களையும் கொல்வான். அங்கு சூறையாடலுக்கு
அளவே இருக்காது, உருளும் இரும்பு சக்கர வண்டிகளின் ஓசை ஓயாது, சக்கரங்களின்
கிறிச்சிடும் ஒலி அடங்காது, மறைந்து தாக்குவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும், அவர்களின்
துப்பாக்கி துரு ஏறாது. நீங்கள் காயமடைந்து கூட்டமாய் இருக்கிறீர்கள், தொலைவில்
பிணங்கள் குவிந்து கிடக்கிறது, மாண்டவர்களுக்கு கணக்கே இல்லை அந்த பிணங்களின்
மேல் இடறிவிழுகின்றனர் .



அழகாய் மயக்கும் கவர்ச்சியால் பல நாட்டவரையும் ஏமாற்றிய அந்த
விலைமகனின் எண்ணற்ற வேசித்தனங்களே இதற்கு காரணம்

என் மக்களே ! உன்னை தேற்றுவோரை நான் எங்கே தேடுவேன் யாரேனும் உண்டோ ?
என்று சொல்லுங்கள். அவர்களை நான் எங்கே தேடுவேன் ? வன்னியிலா ? முல்லையிலா ?
அல்லது யாழிலா ? கடலை அரணாகவும், தண்ணீரை மதிலாகவும் கொண்ட என் தேசமே !
உன் மக்களை காக்க நீ எழும்ப மாட்டாயா ? முற்றுகை நாளுக்காகத் தண்ணீரை சேமித்து ! வை
உன்னுடைய அரண்களை வலிமைப்படுத்து !



சிட்டுகுருவிகள் போல் மடிந்தது தெரியாது மடிந்தனர் என் மக்கள், புகையென மறைகின்றனர்
அவர் இதயம் புல்லென தீய்ந்து கருகுகின்றது, எதிரிகள் நாள் முழுதும் இழித்துரைக்கின்றனர்
சாம்பலைத்தான் உணவாக தருகின்றனர். இந்த முள்வேலியில் மாட்டப்பட்டிருக்கும்
என் உடைமைகளில் என் இதயமும் இருக்கிறது பாருங்கள். அது கேட்கும் கேள்விகளுக்கு
உங்களில் யாருக்காவது விடைதெரியுமா ? நான் மரணித்து நாட்களாயின ! அந்த பிணங்களின்
குவியலில் நான் அம்மணமாய் படுத்திருக்கிறேன் நீங்கள் என்னை கவனித்தீர்களா ?
மரணம் என்னை நோக்கி வருவதை நான் மரிப்பதற்கு முன் கண்டேன். அது மிக கொடூரமாக
என்னை தாக்கியது, என் சகோதரர்களின் மரணத்தை நான் சில வினாடிகளே தள்ளி போட முடிந்தது.


மரணம் என் உடலைவிட்டு என்னை துரத்தியது ஆனால் என் தேசத்தைவிட்டு அல்ல.

Wednesday, May 5, 2010

நான் காற்றாய் வருவேன்



அந்தரத்தில் சிக்கி தவிக்கிறேன்
கழுமரத்தில் ஏற்றிவிட்டாய் என்னை!
நேசிக்க ஒருவருமில்லை எனக்கு
அண்ணாந்து பார்த்து கூப்பிடவும் இல்லை
என் சிலுவை மிக பாரமானது
சிலுவையின் அடியில் நீ
சிரித்துக்கொண்டு!
தேவதைகள் உன்னை தூக்கிச் சுமக்கலாம்.
என் தேடல் என்னை தூக்கிச் சுமக்கிறது
விரல்களின் விளிம்பில் உன் நினைவுகள்!
இதயத்திடம் கற்றுக்கொண்டேன்
துடிப்பது எப்படி என்று!
விழிகளில் நீர்வழிய நிற்கிறேன்
அதை ருசிப்பதற்கு
காத்துக்கிடக்கிறது என் நிலம்.!
நான் நானாக தான் இருக்கிறேன்!
நீ தான் நானில்லை என்கிறாய்!
நான் ஜன்னல் வழியே
பிரபஞ்ச தேவனை பார்க்க செல்கிறேன்
நீ காற்றுள்ள போதே தூற்றிக்கொள்!
நான் காற்றாய் வருகிறேன்...

Monday, May 3, 2010

ஒளியும் நானும் ...






நான் சாலையில் நடந்து வருகையில்
அந்த நிலவே என்னை தினமும் இரவில் பின் தொடர்கிறாள்
என் சாலைக்கும்
என் கால்களுக்குமான
தொடர்பு நெருங்கி கொண்டே போகிறது!
ஒளி என்னை கடக்கையிலும்
நான் ஒளியை கடக்கையிலும்
இருளை நினைவுப்படுத்துகிறது அந்த தருணங்கள்
பயமாய் இருக்கிறது எனக்கு
சாலைகளில் ஊர்ந்து வரும் வேகமான வாகனங்களில்
என்னை இணைத்துக்கொள்ள பல நேரங்களில் எண்ணம்
என் கோழைத்தனம் அதை தினமும் தள்ளிப்போட்டு கொண்டே இருக்கும்
என்னுடைய நினைவுகளை கைப்பிடித்துக்கொண்டே
நான் தினமும் எண்ணிக்கையற்ற தூரத்தை கடந்தே செல்கிறேன்.
நான் மையமான அன்பை தேடியே என் நாட்களை நகர்த்துகிறேன்
தெருவிளக்கில் படித்த நண்பனை பார்த்தப்போதெல்லாம்
ஒளியின் அவசியம் என்னுள் புகுத்தப்பட்டிருக்கிறது!
நான் எதை நோக்கி பயணிக்க வேண்டும் என்பதை
ஒளியே தீர்மானிக்கிறது!
என் இரவுகளில் நேர்கோட்டில் பயணம் செல்லும் ஒளி
சற்று அலைவடிவில் பயணித்தால்
நாம் என்னவாக மாறியிருப்போம்
என்பதை என்னால் யூகிக்கமுடிகிறது
எனக்கு ஒளி தேவை
என்பதை மெல்ல உணர்கிறேன்
இருளின் வக்கிரம் ஒளியால் முடக்கப்படுகிறது
என்பதை என் பயணம் கற்றுத்தருகிறது....