Thursday, July 7, 2011

பெருவெளியில்...


பயணம் என்பது மாயை
மாற்றம் என்பது மாயை
பரிணாமம் என்பதும் மாயை
நாம் எளிதாக சுறுசுறுப்பாகிறோம்
தற்காலிகங்களோடு நம்மை
நாமே குழப்பிக் கொள்கிறோம்
அடையாளங்களை மறந்து
இயற்கையின் அன்பை காணாது
இந்த பெருவெளியில்
நடந்து கொண்டேயிருக்கிறோம்
அழியாத் தன்மையை மறந்து ...

Saturday, June 18, 2011

அன்பு மரணம்...



என்ன செய்வாய் ?
உன் ஊரின் மேல் ஏவுகணைகள் வீசப்பட்டால்  
கூரைகள் தரையில் பதுங்கி கிடந்தால் 
நீ தனிமையில் குளிரில் நடுங்கினால்
உன் தெருவை தேடினால்
உன் தந்தையும் தாயும் கொல்லப்பட்டால்
அனைவரையும் தொலைத்துவிட்டால்
நீ மட்டுமே அனைத்திற்கும் சாட்சியாய் மாறிவிட்டால்

நீ ஓடவேண்டும்  எங்கு ஓடுவாய் ?
நீ மரித்தால் யாருக்கு தெரியும் ?
சில கணங்களே உள்ளது .
உன் கைகளும் கண்களும் கட்டப்பட்டு !

நீ என்னை சந்திக்க
உன் தலைக்கு பின் தோட்டாக்கள்
பாயத்துடிக்கும் துப்பாக்கிகளுக்கு
உள்ளிருக்கும் 

உன் அன்பு மரணம் ... 

Friday, June 10, 2011

மேசையின் மீது என் காதல்




என் கண்களின் வழியாக
வழிந்து கொண்டிருப்பது
வார்த்தைகளைவிட மேலானவை
அவை என்
இதயம் பேசும் மொழி
என் உணர்வுகள்
என் ஆழ்மனதின் சிறுகதை

உனக்காகவே அதை வெளிகொணர்கிறேன்
இந்த மேசையின் மீது
வைக்கப்பட்டிருக்கும்
இதயமும்
ஆன்மாவும்
உனக்காக காத்துகொண்டிருப்பது
புரிகிறதா

என்னை ஊமையென  
நினைத்துவிடாதே
நான் உள்ளே
மரித்துக்கொண்டிருக்கிறேன்
இன்னமும்  
உனக்கு புரியவில்லையா
ஆம்
மௌனம் இதுவரை யாருக்கும்
புரியாத காதலின் மொழி . . .

Sunday, April 17, 2011

சுயநலமும் புறக்கணிப்பும்



அபரிமிதமான சுயநலம்
இளமையான ஆன்மாவிடமிருந்து
என் இரத்தக்குழாய் வழியாக
எல்லாவற்றையும் மறந்துவிடும் என் வாய் வழியாக
உற்பத்தியாய்க் கொண்டேயிருக்கிறது

எனது வார்த்தைகள்
அலட்சியம் ஊறியதாய்
இந்த நிலம் முழுக்க இறைந்துகிடக்கும்
அவை உறவுகளை விரிசலடைய
செய்து தகர்த்துவிடும்
அப்போதும் மூடிய என் கண்கள்
அவைகளை புறக்கணித்திருக்கும்

அந்த விலகல், காலி தட்டில்
கூர்மையான கத்தியால் தாக்குவது போல்
என் காதுகளில் முணுமுணுப்பால் தாக்கியது
ஆனால் இன்னமும்
என் தலை வெட்கிச்சாயவில்லை. . .

Saturday, April 9, 2011

தொடர்பற்றவனாய் நான்




நான் கடந்து வருபவர்களை
என்னால் உடனே மறந்துவிட முடிகிறது
எனது எண்ணமும் என் நிழலை போலவே
என்னிடமே சுற்றிதிரிகிறது

நான் சந்திப்பவர் மனதில்
நான் தங்குவது கிடையாது
என்னுள்ளும் நீங்கள் அப்படித்தான்

நீங்கள் என் வாழ்கையில்
வந்து போகும் அந்தணர்களே
நானும் இங்கே அப்படித்தான்

ஓடையில் நீர் தங்கலாம்
அதன் மீன் தங்கலாம்
எட்டிப்பார்க்கும் உன் முகமும்
கடந்து போகும் மேகமும்
அதில் தங்குவது கிடையாது
எல்லாம் சாத்தியங்களே
நதியும் அப்படித்தான்
கடலும் அப்படித்தான்

உறக்கம் வரும் கனவும் வரும்
கனவு வரும் போது நீ உறங்குவது 
நிஜமா உறங்கிப்பார் தெரியும் . . .

Wednesday, April 6, 2011

சிறந்த முட்டாள்தனம்



அழகும் கோரமும் என்னுள் ஒளிந்து கிடக்கிறது
நான் அவைகளை கண்டுகொள்ள போவதில்லை
சரியும் தவறும் என்னை பின் தொடர முயற்சிக்கின்றன
அவைகளை நான் நிறுத்த போவதில்லை
எனது அறிவும் அறியாமையும் ஒன்று மற்றொன்றை
சார்ந்தது அவைகள் என்னை ஆள நினைகின்றன
என் தந்தைக்கும் அவர் தந்தைக்கும் இது இப்படியே நடந்தது
இன்று எனக்கு எப்படி அது மாறிவிடும்?
ஆனால் ஒன்றை விளக்கிவிட்டு மற்றொன்றை
பற்றிக்கொள்ள நினைக்கிறேன், அப்படி நடந்தால்
உலகின் மிக சிறந்த முட்டாள்தனம் இதுவேயாகும் . . . 

Wednesday, February 9, 2011

கைதியாய்


நான் பார்ப்பதெல்லாம்
சிவப்பு

நான் கேட்பதெல்லாம்
அலறல்

நான் உணர்வதெல்லாம்
ஈரம்

நான் நினைப்பதெல்லாம்
மரணம்

நான் ஏங்குவதெல்லாம்
சுதந்திரம் . . .