Monday, November 8, 2010

மௌனம்


உனது மௌனம் எனதருகில் சுவாசித்து செல்கிறது
என் தலையை நான் நிமிர்கையில்
அது என் கழுத்தருகில் சுவாசிக்கிறது

எனது புழுக்கமான இரவுகளில்
நான் உறங்காத பொழுதுகளில்
என் மெத்தையில் அது உறங்கிச்செல்கிறது

தினமும் கடந்து செல்லும் ஆயிரம் தடயங்களில்
நிஜமான என்னை
அது அடையாளம் காண்கிறது

சத்தமான சாலையில்
குழம்பிய மனித மனங்களின் மத்தியில்
உனது மௌனம் மட்டுமே எனக்கு ஆறுதலானது

அது என்னை சுற்றியே திரிகிறது
இயக்க விதிகளையும்
ஈர்ப்பு விதிகளையும் ஏற்க மறுக்கிறது

உனது மௌனம் இருண்ட சாலைகளை
ஒளிமிகுந்த சாலையாக மாற்றி தருகிறது
அது எங்கும் நிறைந்திருக்கிறது

எனது நிழலினை போல என்னை விட்டு செல்லாது
உனது மௌனம் என்னை அணைத்து வழிநடத்துகிறது

தேவையில் என்னை கட்டித்தழுவுகிறது
உன்னை நான் சமீபகாலங்களில் தேடுவதே கிடையாது

உனது மௌனம் என்னை
பின் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது
எங்கும் எப்போதும்...