Friday, May 21, 2010

வேலியில் செருகிய இதயம்




வானத்தில் மேகங்கள் திறண்டால் பூமிக்கு மழை வரும் என்பது தெரியும்.
அப்படித்தான் காற்றும் வேகமாக வீசும் நேரம் சரியாக யாரும் கணிப்பது
கிடையாது. அப்படி வீசிய காற்றில் விழுந்த மரம் வடக்கில் விழுந்தாலும்
தெற்கில் விழுந்தாலும் விழுந்த இடத்தில் தான் அது இருக்கும்.


என் பயண நாட்களில் நான் கண்ட மனிதர்கள் மிக மேலானவர்கள்
என்றுத்தான் நான் நினைத்திருந்தேன், என்னை நான் கண்டுகொள்ளும்வரை.
நான் சிரித்ததை விட துயரத்தில் இருந்ததை மேலென கருதுகிறேன், ஏனென்றால்
துயரத்தால் முகத்தில் வருத்தம் தோன்றலாம் ஆனால் அது என் உள்ளத்தைப்
பண்படுத்தியது.

என் மக்கள் அங்கு ஒடுக்க படுவதையும் கண்ணீர் சிந்துவதையும் நாம் பார்த்து
என்ன செய்துவிட்டோம், யாராவது அவர்களுக்கு ஆறுதலாய் இருந்தோமா ?
அவர்களை தேற்றினோமா ? அவர்களை ஒடுக்கோவோர் கைகள் ஓங்கித்தான்
இருக்கிறது இன்னமும். இன்று உயிரோடு இருப்பவர்களின் நிலைமையை விட
ஏற்கனவே மாண்டு மறைந்துபோனவர்களின் நிலைமையே மேலானது.

ஏன் நான் இன்னமும் விடைக்காக அலைந்து கொண்டு இருக்கிறேன். எனக்கு
தெரிந்து தான் இருந்தது அந்த விடை, நான் பிறந்தேன் நிச்சயம் இறப்பேன்
நட்டவன் அறுப்பான், இடிக்கப்பட்டது எழுப்பப்படும், அழுத குழந்தை சிரிக்கும்,
போருக்கு ஒரு காலம் என்றால் அமைதிக்கு ஒன்று உண்டு தானே.
விழுந்தவன் எழுவான் என்பது உண்மைதானே.

மக்களே ! நீங்கள் அழுவது எனக்கு கேட்கிறது அந்த முள்வேலிக்கு பின்னிருந்து
நீங்கள் பாடுவதும் எனக்கு கேட்கிறது. உங்கள் உடைமைகளை நீங்கள் அந்த வேலியில்
மாட்டிவைத்திருப்பதும் எனக்கு புரிகிறது. அவர்கள் உங்களை பாட சொல்லலாம்.
பாடுங்கள் ! வெற்றியின் பாடலை பாடுங்கள். உங்கள் பிள்ளைகளை அவர்கள்
மிருகங்களை போல் நடத்தலாம். அவர்களை பாறைகளில் மோதி கொல்லளாம்.
மிக அருகிலிருந்து தாக்கலாம், மகிழ்ச்சியாய் இருங்கள். இது அவர்களுக்கான நேரம் !
இது வெகுநாட்களுக்கல்ல ! எதிர்க்க முடியாத வீரன் வருகிறான் நம்மை காப்பான் அவன்.


இரத்தகறை படிந்த நம் ஊருக்கு நிச்சயம் கேடுவரும். அங்கு பொய்யும் கொலையும்
நிறையும். உன்னை கொன்றவன் அவர்களையும் கொல்வான். அங்கு சூறையாடலுக்கு
அளவே இருக்காது, உருளும் இரும்பு சக்கர வண்டிகளின் ஓசை ஓயாது, சக்கரங்களின்
கிறிச்சிடும் ஒலி அடங்காது, மறைந்து தாக்குவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும், அவர்களின்
துப்பாக்கி துரு ஏறாது. நீங்கள் காயமடைந்து கூட்டமாய் இருக்கிறீர்கள், தொலைவில்
பிணங்கள் குவிந்து கிடக்கிறது, மாண்டவர்களுக்கு கணக்கே இல்லை அந்த பிணங்களின்
மேல் இடறிவிழுகின்றனர் .



அழகாய் மயக்கும் கவர்ச்சியால் பல நாட்டவரையும் ஏமாற்றிய அந்த
விலைமகனின் எண்ணற்ற வேசித்தனங்களே இதற்கு காரணம்

என் மக்களே ! உன்னை தேற்றுவோரை நான் எங்கே தேடுவேன் யாரேனும் உண்டோ ?
என்று சொல்லுங்கள். அவர்களை நான் எங்கே தேடுவேன் ? வன்னியிலா ? முல்லையிலா ?
அல்லது யாழிலா ? கடலை அரணாகவும், தண்ணீரை மதிலாகவும் கொண்ட என் தேசமே !
உன் மக்களை காக்க நீ எழும்ப மாட்டாயா ? முற்றுகை நாளுக்காகத் தண்ணீரை சேமித்து ! வை
உன்னுடைய அரண்களை வலிமைப்படுத்து !



சிட்டுகுருவிகள் போல் மடிந்தது தெரியாது மடிந்தனர் என் மக்கள், புகையென மறைகின்றனர்
அவர் இதயம் புல்லென தீய்ந்து கருகுகின்றது, எதிரிகள் நாள் முழுதும் இழித்துரைக்கின்றனர்
சாம்பலைத்தான் உணவாக தருகின்றனர். இந்த முள்வேலியில் மாட்டப்பட்டிருக்கும்
என் உடைமைகளில் என் இதயமும் இருக்கிறது பாருங்கள். அது கேட்கும் கேள்விகளுக்கு
உங்களில் யாருக்காவது விடைதெரியுமா ? நான் மரணித்து நாட்களாயின ! அந்த பிணங்களின்
குவியலில் நான் அம்மணமாய் படுத்திருக்கிறேன் நீங்கள் என்னை கவனித்தீர்களா ?
மரணம் என்னை நோக்கி வருவதை நான் மரிப்பதற்கு முன் கண்டேன். அது மிக கொடூரமாக
என்னை தாக்கியது, என் சகோதரர்களின் மரணத்தை நான் சில வினாடிகளே தள்ளி போட முடிந்தது.


மரணம் என் உடலைவிட்டு என்னை துரத்தியது ஆனால் என் தேசத்தைவிட்டு அல்ல.

2 comments:

  1. na marubadiyum indha madhiri ezhudhadhinga na emotiona control panna mudiyala.....

    ReplyDelete
  2. //என் சகோதரர்களின் மரணத்தை நான் சில வினாடிகளே தள்ளி போட முடிந்தது. மரணம் என் உடலைவிட்டு என்னை துரத்தியது ஆனால் என் தேசத்தைவிட்டு அல்ல.//

    அற்புதமான வரிகள். கண்ணீரை வரவைக்கின்றன.தொடர்ந்து எழுதுங்கள்.

    ReplyDelete